ஹைகூ, பொய்கூ, புதுக்கூ

நா.கண்ணன்


எப்போதும் இல்லாத அளவு கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று கூடிக்குலாவும் நூற்றாண்டு இது. கூடுதல் பிறப்பிற்கு வித்து. வண்ணங்கள் கூடும் போது சித்திரம் பிறக்கிறது. ராகங்கள் கூடும் போது இசை பிறக்கிறது. சிந்தனைகள் கூடும் போது கவிதை பிறக்கிறது. கவிதை சிந்தனையின் ஆதி வடிவங்களில் ஒன்று. பண்பட்ட கலாச்சாரங்களில் கவிதை வளம் இருக்கும். தமிழுக்கு வளம் மிக்க கவிதை பாரம்பரியம் உண்டு. அதனால்தான் "வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியால் ஏகாரத்தில் பேச முடிகிறது. நல்ல கவிதை புதிது. நித்தம் நவமென ஔஒவிடும் உள்ளமிருந்தால் கவிதையும் புதிது புதிதாய் இருக்கும். உலகு ரம்யமாய் இருப்பதற்கு காரணமே அது புதிது புதிதாய் இருப்பதுதான். ஒருநாள் போல் ஒருநாள் புலர்வதில்லை. மறையும் சூரியனின் அழகும் நாளுக்குநாள் மாறுபடுகிறது. அதேபோல் - மானிடர்கள், அவர்கள் வாழும் தேசங்கள், அவர்கள் பேசும் மொழிகள், அவர்கள் செய்யும் கவிதைகளும் ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை. ஹைகூ என்பது ஜப்பானிய கவிதை.

வள்ளுவத்தை புரிந்துகொள்ள தமிழர்தம் பண்பாட்டை புரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ, அதுபோல் ஹைகூவைப் புரிந்து கொள்ள ஜப்பானிய வழிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். பொதுவாகவே ஜப்பானியர்களுக்கு அழகுணர்ச்சி அதிகம். ஜப்பானின் எண்பது சதவிகித நிலப்பரப்பு மலையும் மலை சார்ந்த குறிஞ்சியாக இருப்பது ஒரு காரணமாகலாம். குறிஞ்சித் தெய்வமான முருகனுக்கு "அழகு" என்றுதானே பேர். ஜப்பானியர்களின் மொழி வடிவே சித்திரமாக இருக்கிறது. குழந்தையிலிருந்தே இச்சித்திர வடிவங்களை எழுதிப் பழகுவதும் ஒரு காரணமாகலாம். இவ்வடிவங்களுக்கு காஞ்சி என்று பேர். இது தவிர அவர்கள் மூன்று எழுத்து வடிவங்களையும் பயன் படுத்துகின்றனர். அவை முறையே ஹிரகானா, கதகானா, ரோமாஜி என்பவை. சித்திரம் போன்ற காஞ்சிகளுக்கு ஒலி உண்டு, பொருள் உண்டு. மற்றவை எழுத்து வகைகள். அவைகளுக்கு ஒலி உண்டு. காஞ்சியில் சொல்லமுடியாததை ஹிரகானா போட்டு நிரப்புவர். வௌஒநாட்டு வார்த்தைகளுக்கு ஏற்பான ஜப்பானிய ஒலி/எழுத்து இல்லாதபோது அதை ஈடு செய்ய கதகானா என்ற எழுத்தை உருவாக்கினர். இம்முறைகளினால் பழைய பண்பாடு அறுபடாமல் புதிய ருற்றாண்டிற்கு மாற்றம் கொள்ள முடிந்தது. ரோமாஜி என்ற முறை ஒரு சரித்திர தேவையை ஒட்டி எழுந்தது. போர்த்துக்கீசியர்கள் மூலம் ஐரோப்பிய கலாச்சாரம் ஜப்பானுக்குள் நுழைந்த போது வாய்க்குள் நுழையாத பல புதிய வார்த்தைகளும் நுழைந்தன. இரண்டாவது யுத்தத்திற்குப் பின் ஜப்பான் அமெரிக்காவின் நேரடிப் பார்வையில் கொஞ்சகாலம் இருந்தது. ஜப்பானியர்களுக்கு தங்கள் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் ஆங்கிலத்தில் தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம். ஆளும் வர்க்கத்தை "காஞ்சி" கற்றுக் கொண்டு எழுது என்று சொல்ல முடியாததால், ஆளும் வர்க்கம் ஜப்பான் மொழியை அவர்கள் வரிவடிவமான ரோம வரிவடிவில் எழுதிய போது பிறந்ததுதான் ரோமாஜி. அதாவது ஜப்பான் மொழி பேசத்தெரிந்து காஞ்சி படிக்காத மேலை நாட்டவர் பயன்படுத்துவதற்காக எற்பட்ட முறை. (நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? ஆங்கிலேயன் போனபின்னும் ரோமாஜியில் எழுதிக்கொண்டு இருக்கிறோம்! வாரியார் கொடுத்த ஒரு கேசட்டில் எழுதியிருந்தது: Illakiyathil Nagai Chuvai என்று. பத்து நிமிடம் கழித்து புரிந்து கொண்டேன் அது "இலக்கியத்தில் நகைச்சுவை" என்று. இந்த ரோமாஜி முறை யாரை திருப்திப்படுத்த? யாருக்குப் புரிய வைக்க?)

ஜப்பானிய மொழி ஒரு பண்பட்ட மொழி. ஆசிய மொழி. நல்ல பேச்சு, சாதுர்யமான பேச்சு, நளினமான பேச்சு, விநயமான பேச்சு என பல தளங்களில் அது அமைகிறது. இவை எழுத்துருப்பெரும்போதும் அதற்கேற்றார்போல் பயன்படும் காஞ்சிகளும் மாறுபடுகின்றன. ஹைகூ என்பது நளினமான சிந்தனையின் கவி வடிவம் என்பதால் அதற்கென பயன்படும் காஞ்சிகளும் பிரத்தியேகமானதாக இருக்கின்றன. ( ஆசிய மக்களான ஜப்பானியர்கள் குழந்தைக்குப் பெயரிடும் போது பல நாள் யோசித்து, பொறுக்கி எடுத்து காஞ்சியை பயன்படுத்துகின்றனர்.) ஹைகூ கவிதைகளும் பொறுக்கி எடுத்த பொருத்தமான காஞ்சிகளின் சித்திரவடிவமாகும். எனவேதான் ஹைகூக்களை அழகான தூரிகை கொண்டு "சுமியே" என்ற முறையில் பெரிய பஞ்சு/பட்டு படுதாக்களில் எழுதி தொங்கவிடுகின்றனர். கவிதையில் விழும் காஞ்சிகள் ரொம்பவும் விசேஷமானவையாக அமையும் போது, புத்தகத்தில் விளக்கமாக அதற்கான ஒலிமுறைகளை ஹிரகானாவில் எழுதும் வழக்கமும் உண்டு. எழுத்துக்கு பழக்கப்பட்ட நமக்கு இது கொஞ்சம் குழப்பலாம் ! ஓவியத்திற்கு ஒலி கொடுப்பதால் வரும் குழப்பம். சித்திரத்தை வரைந்து விட்டு இது இப்படி ஒலிக்கப்படவேண்டும் என்று எழுத்தில் சொல்வது. அதாவது வீட்டின் படத்தை வரைந்துவிட்டு "வீடு" என்று பக்கத்தில் எழுதுவது போல!

அதாவது, ஒரு ஜப்பானிய சாமான்யன் ஹைகூவைப் புரிந்துகொள்ள காஞ்சியைப் பார்த்து, ஹிரகானாவின் துணையுடன் அதை உச்சரித்து, பொருள் கொள்ள பழகவேண்டும். கொஞ்சம் ஜப்பானிய மொழி பேசத்தெரிந்த சாமானியனுக்கு ஹைகூவை ரோமாஜியில் எழுதி புரிய வைக்கலாம். இவையெல்லாம் தெரியாத வௌஒநாட்டாருக்கு ஆங்கிலத்தில், பிரெஞ்சில் மொழி பெயர்த்து சொல்ல வேண்டும். இப்போது தமிழகத்தில் வந்து நிற்கும் ஹைகூ இத்தனை படிகளையும் தாண்டியபியகுதான் வந்து சேர்ந்திருக்கிறது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே ஹைகூவைப் பார்த்து அது தரும் ஓவிய இன்பத்தை ஜப்பானியர் அல்லது அம்மொழி புலமையுடைய வௌஒநாட்டார் தவிர மற்றவர் அனுபவிப்பது முடியாமல் போகிறது. இதற்கொப்பான வேறொரு கலை இன்பத்தையும் ஹைகூவில் வைத்திருக்கின்றனர். அதுதான் அட்சர மகிமை! அதாவது ஹைகூ என்பது பதினேழு அட்சரத்திற்குள் அமையவேண்டும். எதை விட்டுக் கொடுத்தாலும் ஜப்பானியர்கள் இதை விட்டுக்கொடுப்பதில்லை. பதினேழு அட்சரத்திற்குள் ஹைகூவைக் கொண்டு வருவதுதான் கவியின் திறமை. ("நான் சென்றேன், கூடவே நிழலும்" என்று தமிழில் எழுதுவதெல்லாம் ஹைகூவே இல்லை!) பொதுவாக ஹைகூ மூன்று படிகளில் அமைகிறது. முதல் படியில் ஐந்து அட்சரம். இரண்டாவதில் ஏழு. மூன்றாவதில் மீண்டும் ஐந்து.

உதாரணமாக ஜோசோவின் (1662-1704) ஹைகூவைப் பார்ப்போம். ஹைகூவை தமிழாஜியில் (அதாவது ஜப்பானிய மொழியை தமிழில் எழுதுவது) தருகிறேன்.

நோ மோ ய மா மோ..........(5)
யுகி நி தோ ரா ரெத் தே........(7)
நா னி மோ நா ஷி......... (5)


அடைப்புக் குறியில் இருப்பது அட்சர எண்ணிக்கை. நோ என்றால் வயல் வௌஒ; யமா என்றால் மலை; யுகி என்றால் பனி; தோராரெத்தே என்றால் ஆட்படும்போது (ஆளுமையில்); நானிமோ என்றால் எதுவுமே என்றும்; நாஷி என்றால் ஒன்றுமில்லாமல் போகிறது என்றும் அர்த்தப்படுகிறது. அதாவது வயலும், மலையும் பனியின் ஆளுமையில் ஒன்றுமில்லாமல் போய் விடுவதாய் சொல்கிறார் கவி. பாஷோவின் சீடரான ஜோசோ ஒரு ஜென் துறவி. ஜென்னின் வெறுமை கவிதையில் தெரிகிறது.

எனவே ஹைகூ என்பது மூன்று படிகளில் 17 அட்சரங்களில் அமையும் சின்ன கொலு. அடுத்ததாக நம் ஐந்திணை கவிதைகள் போல் ஹைகூவில் கவிபாடும் திணைக் குறிப்பு (அதாவது தமிழக சூழலில் திணை=பருவகாலம் எனக் கொண்டால்) இருக்கும். வள்ளுவனின் "யாகாவராயினும் நா காக்க" என்ற குறட்பா ஹைகூவில் எழுதப்பட்டால் எப்படியிருக்கும் என்று பார்ப்போம்:

வார்த்தை விழுந்த பின்
உதடுகள் உறைந்தன
முன்பனிக் காற்று


இது பாஷோ (1644-94) வின் ஹைகூ. முன்பனிக் காலத்தில் எழுதியது.

இதையொட்டி ஹைகூவின் கருப்பொருள் பெரும்பாலும் இயற்கையின் ஒரு காட்சியை சித்திரம் போல் சொல்லும் வழக்கமும் உண்டு. பருவகாலங்களை ரசிப்பதை ஒரு கலையாகவே வளர்த்திருக்கின்றனர் ஜப்பானியர். உதாரணமாக வசந்தம் பூத்துக் குலுங்கும் போது சக்குரா (செர்ரி) மலர்களை ரசித்துக் கொண்டே சாக்கே என்ற மது பானத்தை அருந்துவதை "ஹனாமி சாக்கே" என்று கூறியும், பனி மலர் தூவும் குளிர் காலத்தில் லயூக்கி மீரு சாக்கே" என்று சொல்லியும் விழா எடுக்கும் ஆசாமிகள். இவர்களின் ஹைகூ இந்த ரசனையை இன்னும் கூட்டுவதாக அமைகிறது. பூங்காக்களில் கூடி ஹைகூ பாடும் வழக்கமும் உண்டு.

ஹைகூவில் வேறொரு ஜப்பானிய சூட்சுமமுண்டு. அதாவது, மூன்று வரிகளில் என்னதான் சொல்லிவிட முடியும்? இந்த கேள்வியின் கனத்தை புரிந்து கொள்வது போல் ஹைகூவில் சொல்வதை விட, சொல்லாததை புரிந்து கொள்ள வாசகனை உந்தும் முயற்சி இருக்கிறது.

கியோத்தோ என்றொரு பிரபலமான நகரம். அங்கு பல வழிபாட்டுத் தலங்கள் உண்டு. அதிலொன்று அழகான பூங்காவில் அமைந்துள்ளது. பொதுவாக கோவிலென்றால் மதில் இருக்கும், கோபுரம் இருக்கும். ஆனால் இந்த வழிபாட்டு தலத்தில் இருப்பதென்னவோ அழகான வாயிலொன்றுதான். முதலில் பார்ப்பவர்களுக்கு இவ்வளவுதானா? என்ற கேள்வி எழும். அவ்வளவுதான் ! அந்த வாயில் இருப்பதால்தான் உள்ளும், புறமும் பரந்து விரியும் பிரபஞ்சத்தையே கோவிலாக தரிசிக்கும் ஒரு உணர்வு உருவாகிறது. ஜப்பானியர் "வௌஒயை" கையாள்வதில் கொண்டுள்ள திறத்திற்கு இது ஒரு நல்ல சான்று. மீவா என்றொரு ஏரி. ஜப்பானிலேயே பெரிய ஏரி. அதன் கரையிலும் இப்படியானதொரு வாயில். அங்கு நின்று கொண்டுதான் ஹைகூவின் பிதாமகர் மட்சுவோ பாஷோ தன் ஹைகூக்களை எழுதியிருக்கிறார்.
எனவே ஹைகூவை பல நிலைகளில் ரசிக்கமுடிகிறது. பார்த்து, கேட்டு, எழுதி, ஆழ்ந்து சிந்தித்து என இப்படி.

ஹைகூ என்பதற்கு பல பொருட்கள் உண்டு. ஹைகூ என்றால் "நடிக்கும் வரிகள்" அல்லது "ஓவிய கவிதைகள்" என்றொரு பொருளுண்டு. இதையே ஹோக்கு என்றும் சொல்லுகிறார்கள். அதன் பொருள் லஅழைத்துச்செல்லும் உரைகள்" என்று அமைகிறது. ஹாய்காய் என்று சொல்வோரும் உளர். அதற்கு அர்த்தம் "விநயமான நாடகம்" என்பது. இதில் ஹைகூ என்ற பதம் உலகப் பிரசித்தி ஆகிவிட்டது. ஜப்பானில் யாரும் நம்மைப்போல் கையெழுத்துப் போடுவது இல்லை. சின்னதாக அவர்கள் பெயர்கள் கொண்ட காஞ்சியுள்ள முத்திரை. அவ்வளவுதான். வங்கி காசோலையில் கூட இந்த முத்திரைதான் ! ஒரு வகையில் பார்த்தால் ஹைகூ என்பது கூட ஜப்பானிய கலாச்சாரத்தின் முத்திரை போல்தான் தோன்றுகின்றது. சின்னதாக, அழகாக, பொருள் பொதிந்து.

இத்தகைய கலை மரபு கவிதைப் பாரம்பரியமுடைய தமிழகத்தில் நுழையும் போது என்ன ஆகிறது? இது ஒரு சுவாரசியமான விஷயம். சித்திர எழுத்துக்களை மறந்து விடலாம். நாம் சீனர்கள் இல்லை. நமக்கு எழுத்து வடிவமுண்டு. மேலும் ஓவியக் கலையில் மகோன்னத நிலையை நாம் என்றும் தொட்டதில்லை.

மாறும் காலங்கள்? உஷ்ணப் பிரதேசத்தில் எங்கு பருவகாலங்கள்? பருவங்கள் இருந்த சங்க காலத்தில் ஹைகூ நுழையவில்லை. முல்லையும், மருதமும் திரிந்து பாலையாகிவரும் இருபதாம் ருற்றாண்டில் நுழைந்திருக்கிறது. பருவகாலங்களைப் பற்றி யாரும் பதுக்கவிதை கூட எழுதுவதில்லை. பருவகாலங்கள் பழைய காலமாகிப் போனதால். அட்சரத்தில் உள்ள ஒலி நயம்? நமக்கோர் வேத பாரம்பரியம் உண்டு. இருந்தும் தமிழக ஹைகூவில் இதற்கோர் இடமில்லை. சந்தம் தமிழுக்கு புதிதில்லை. அருணகிரியும், திருமழிசை ஆழ்வாரும், பாம்பாட்டி சித்தர்களும் எடுத்து விளையாடிய தமிழ். இருந்தும் சமீத்திய கவிதைகளில் ஒலி நயம் ஒதுக்கப்பட்டு விட்டது. ஹைகூவிலும் அது இல்லை.

ஹைகூ என்று சொன்னாலே ஜப்பானில் ஐந்து, ஏழு, ஐந்து என அட்சரக் கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் இல்லை தமிழ் ஹைகூவில். வேறு என்னதான் இங்கு மிஞ்சி இருக்கிறது? நமக்கு குறள் வடிவம் புதிதில்லை. குள்ளமாக கவி சமைக்கத் தெரியும்.

கடுகைத் துளைத் தேழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்


என்பர்.

எனவே ஹைகூவின் குள்ளத்தனம் பிரதானப் படுத்தப் பட்டுவிட்டது. குட்டியாக எழுதுவதெல்லாம் ஹைகூ என்ற மாயையும் பிரபலமாகியுள்ளது. முன்பு பத்திரிக்கைக்கு துணுக்கு எழுதிப் போட்டவர்களெல்லாம் இப்போது ஹைகூ எழுத ஆரம்பித்து விட்டனர். இது ஹைகூவிற்கு நேர்ந்துள்ள விபத்து. உண்மையைச் சொல்வதானால் ஜப்பானியர்கள் இதை பெரிது படுத்தவேமாட்டார்கள். ஏனெனில் சத்தியம் பண்ணினாலும் இதையெல்லாம் அவர்கள் ஹைகூ என்றே சொல்லமாட்டார்கள். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு சிறுபிள்ளைத்தனம். அவ்வளவுதான்.

ஆனால் சீரிய புலமையுள்ள கவியால் தமிழில் ஹைகூ எழுத முடியாதா?
இதற்கான பதிலை கலாச்சார பரிணாம நோக்கில் அணுக வேண்டும் எனத் தோன்றுகிறது. ஜப்பானியர்கள் காதால் கூட கேட்டறியாத கங்கைச் சமவௌஒயிலிருந்து கிளம்பிய புத்தமதம் சைனாவைக் கடந்து, அதன் கலாச்சார செழுமைகளை உள் வாங்கிக்கொண்டு பின் கொரியாவின் தத்துவச் செழுமையையும் சேர்த்துக் கொண்டு ஜப்பானுக்கு வந்து நிற்கிறது. எளிமையும், இயற்கை வழிபாடுகள் கொண்டதுமான ஷின்டோ யிசம் நிரம்பிய நாடு அது. தத்துவ செழுமைமிக்க புத்த மதம் அரசு ஆதரவுடன் உள்ளே நுழைகிறது. சில நூற்றாண்டுகளில் எங்கு பார்த்தாலும் புத்த விகாரங்கள் மலர்கின்றன. கொரிய, சீன விற்பன்னர்கள் கொண்டுவரப் படுகின்றனர். முதல் சில ருற்றாண்டுகளில் எழுந்த கோவில்களிலுள்ள புத்தருக்கு கொஞ்சம் இந்தியக் களை இருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல இடுங்கிய கண்ணும், மேலேறிய கண்ணமுமாக ஜப்பானிய புத்தராகிவிடுகிறார். பௌத்தம் முழுமையாய் உள் வாங்கப்பட்டு விட்டது. புத்தர் உள்ளூர்காரர் ஆகிவிட்டார்.

இருந்தும் விட்டகுறை, தொட்டகுறை என்பது எதிலும் உண்டு. புத்த ஜாதகக் கதைகளை சிற்பிக்க வேண்டிய கலை நிர்பந்தம். முன்னே, பின்னே யானையைப் பார்த்திராத ஜப்பானியக் கலைஞன் மாயாதேவியின் கனவுகளை சிற்பிக்க வேண்டும். யானை எப்படி இருக்கும் என்று செவி வழியாகக் கேட்டறிந்ததை வைத்துதான் சிலை வடிக்க முடியும். அவன் வடித்த யானையும் அப்படித்தான் இருக்கிறது. இப்படியானதொரு யானைச் சிற்பம் நிக்கோ என்ற ஊரிலுள்ள புகழ் பெற்ற புத்த ஆலயத்தில் உள்ளது. இச்சிற்பத்தை நம் சோழ, பாண்டிய, ஹோசல சிற்பங்களுடன் ஒப்பு நோக்கக் கூடாது.

சில நேரம் தமிழக ஹைகூவின் கதையும் இப்படித்தான் இருக்கிறது. யானையே பார்த்திராத கலைஞன் சிலை வடித்ததைப் போல பத்திரிக்கை (புத்தக) வாயிலாக படித்தறிந்ததை வைத்து ஹைகூ சமைக்க வேண்டிய நிலை நமக்கு. அதுவும் ஆரம்பத்தில் எழுதியபடி நாலு மொழி நிலைகளையும் தாண்டி பின் மொழி பெயர்க்கப்பட்ட கவிதைகளிலிருந்து கிடைக்கிறது மாடல் நமக்கு!

ஆனாலும் இதை அப்படியே முழு உண்மை எனக் கொள்ள முடியாது.
ஏனெனில் யானை சிலை குறையாக உள்ள நாட்டில்தான் ஜென் மதமும் முழுமையுற்று உருவானது. ஜென் எவ்வளவு பௌத்தமோ அவ்வளவு ஜப்பானியமும் கூட. மேற்கு உலகிற்கு புத்தத்தின் தத்துவச் செழுமை ஜப்பான் வழியாகத்தான் சென்றிருக்கிறது. ஜென் கோயன்கள் (சிலேடைக் கதைகள்) வழியாக பௌத்தத்தை புரிந்து கொள்வது போல் நமது சமிஸ்கிருத, பாலி சூத்திரங்கள் வழியாகக்கூட புரிந்து கொள்ள முடிவதில்லை. இருப்பினும் இன்றும் ஜப்பானியர்களுக்கு புத்தன் பிறந்த மேற்கு மண்தான் சுவர்க்கம் இருக்கும் திசையாக அமைகிறது. இது நன்றிப் பெருக்கின் அடையாளம்.

தமிழகத்திற்கு வந்திருக்கும் ஹைகூவிற்கும் இப்படியானதொரு நிலை ஏற்பட்டு உள்ளது. இதை விரிவாக கீழே பார்ப்போம். நாமும் ஹைகூ எழுதிவிட்டு ஜப்பானை கை காட்டுகிறோம். இதுவும் நன்றிக் கடன்தான்.

சரி ஒரு ஆராய்ச்சி செய்வோம். தமிழக ஹைகூ எவ்வளவு அசலானது? ஹைகூவின் யாப்பு இலக்கணத்தை வைத்துப் பார்த்தால் நாம் செய்வது ஹைகூவே இல்லை.

யாப்பு மீறி ஹைகூவிற்கு ஒரு எளிமை இருக்கிறது. அது எவரையும் கவர்கிறது. புதுக் கவிதை யுகத்தில் இருக்கும் நமக்கு இது பிடித்துப் போவதில் அதிசயமில்லை. எனவே நாம் ஹைகூவின் இலக்கணத்தை விட்டோ ம். நம் வெண்பா, அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் போன்ற கவி வடிவங்களையும் உதறிது போல் (அபச்சாரம், இதை ஜப்பானியர்களிடம் சொல்லிவிடாதீர்கள். அவர்கள் இன்றும் இலக்கண சுத்தமாகத்தான் ஹைகூ எழுதுகிறார்கள்)

இதை பெரிய தவறாகவும் கொள்ளமுடியவில்லை. பரிணாமம் நடந்து கொண்டேயிருக்கிறது. சேரும் போதெல்லாம் புதியவை பிறக்கின்றன. மேலும் நாம் வாழ்வது விடுதலை ருற்றாண்டு. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சாக இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஹைகூவிற்கும் பரிணாமம் நடந்திருக்கிறது.

சரி இனி நம் கவிகள் ஹைகூவில் கண்ட ஆதர்சனம் என்னவென்று பார்ப்போம். ஹைகூ காண்பது என்ன? சொல்வது என்ன? ஹைகூ காண்பதை அப்படியே சொல்கிறது. இருத்தலின் அழுத்தமான முத்திரையாக. நிகழும் ஒவ்வொரு நொடியிலும் நம்மால் நிற்க முடிகிறதா? ஒன்று பழைய நினைவில் மூழ்கி இருக்கிறோம் இல்லாவிடில் புதிய கனவில் மிதக்கிறோம். ஜென்னின் பிரதிபலிப்பான ஹைகூ சிந்தனையை நிறுத்தி நிகழ்வில் பங்கு கொள் என்கிறது. சிந்தனையை கவியாக்காமல் நிகழ்வில் கவி சமைத்தால் எப்படியிருக்கும்? ஷிகி (1867-1902) எழுதிய ஹைகூ போலிருக்கும்:

கோடை இரவு
விழுந்து சாகும் விட்டில் பூச்சிகள்
கவிதைத்தாளில்


இது யோசித்து எழுதிய கவிதை இல்லை என்று வாசித்தவுடனே புரியும். ஜப்பானிய காமிராவில் நிகழும் போது பிடித்த படம். கவிதை எழுதும் போது கவிதையாக வாழ்கிறான் கவி. இதுதான் ஜென். இதுதான் ஹைகூ.

இது போன்ற கவிதைகள் தமிழிலிலும் உண்டு. மித்ராவின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில உதாரணங்களைப் பார்ப்போம்.

கவிதை எழுதுவதை நிறுத்தினேன்
கையில் வந்து அமர்ந்தது...
பசித்த கொசு.


இதில் பெரிதாக கவிதானுபவம் இல்லாவிட்டாலும் இது ஒரு காமிரா படம் என்று ஒத்துக் கொள்ளதான் வேண்டி இருக்கிறது. அடுத்ததில் அது நிறைய இருக்கிறது.

எழுத நினைத்த கவிதை
மறந்து போயிற்று...
குழந்தை சிரித்தது.


இது கவி கவிதையாக வாழும் பொழுதுகள்.

மூதாதையர் விழா
பிறகு மரத்தின் சல, சலப்பு
பூச்சியின் கீதமும் கூட


என்று எழுதுகிறார் ஒரு பெண் துறவி. பெயர் சோகெட்சு (1759-1819). இவருக்கு விழா, அதன் ஆடம்பரம், கூச்சல் இவை பெரிதாகப் படவில்லை. விழா முடிந்த பிறகு வரும் அமைதியும், அதன் லயிப்பும் பிரதானமாகப் படுகிறது. பௌத்தம் இந்தியாவை விட்டுப் போய் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. எனக்குத் தெரிந்த வரை தமிழகத்தில் பிக்குணிகளைப் பார்த்ததில்லை. மாறாக, பெண்மையின் மென்மை கவிந்துள்ள கவிதைகள் தமிழில் கிடைக்கின்றன. மீண்டும் மித்ரா.

கடிக்கும் கொசு
தாயை எழுப்பும்
சின்னக் கொலுசு


வோறொரு காட்சி....

யார் வீட்டுக் குழந்தையோ
அழுதது... விழித்த எனக்குப்
பாதி நிலா


இக்கவிதைகளை ஒரு தாய்தான் அனுபவித்து எழுத முடியும். துறவி அல்ல. அதனால் இது புது வரவு.

ஜப்பானில் பருவகாலங்கள் உண்டு. அது அதற்கான கவிதைக் குறியீடுகள் உண்டு. உதாரணமாக, சக்குரா மலர் வசந்தத்தையும், மூதாதையர் விழா கோடையையும், இலையுதிர்கால நிலா அக்காலத்தையும், பெய்யும் பனி அக்காலத்தையும் குறிப்பாகச் சொல்லும். பருவகாலங்களற்ற தமிழக சூழலில் ஹைகூக் குறியீடுகள் எப்படி அமையும்?

காலை தோறும்
கண்ணாடி, செம்பு, எஃகு, பித்தளை
பாத்திரக்குரல்கள்


சந்திரலேகாவின் சித்தரிப்பு இது. காலை அப்படியே கண்முன் வந்து நிற்கிறது.

தடுப்போர் தடுக்க
குளிப்போர் குளிக்க
நனைத்துப்போகும் நதி


இது மாலன். நதி பாயும் இந்திய அழகு தெரிகிறது. மித்ராவிற்கு காலை இப்படி மலர்கிறது:

மார்கழிக் கருக்கல்
வாசலில் தண்ணீர் தெளித்தேன்
கோலம் போட்டது.. நிலா!


இவையெல்லாம் தமிழகக்காட்சிகள், கவிதைகள். வேறெங்கும் காணக்கிடைக்காதது. பௌத்தம் வெகுவாய் இந்தியாவில் அழிந்து விட்டாலும், பௌத்த ஞானம் பல உருவில் நிலைத்திருக்கிறது. அவை கவிதை உருக் கொண்டும் இருக்கிறது.

காட்டுத்தீ
குயிலின் சுருதி
கவலையற்று.

என்கிறார் நா.விச்வநாதன். நிலையாமையின் ஒரு காட்சி. வாழ்வு நிலையாமையை எட்டத்தள்ளி "நிகழ்வில்" வாழ்கிறது. அது பௌத்தப் பார்வை. அவர் இன்னும் எழுதுகிறார்:

அறுவடைக்கு வந்து விட்டனர்
வயல் மீன்களுக்கு
இன்னும் பாடல்

பளிச், பளிச்சென்று ஜென் வௌஒச்சங்கள். இந்த நொடியில், அதன் விழிப்பில்தான் வாழ்வின் சந்தோஷமே அடங்கி இருக்கிறது என்ற உண்மை. இதெல்லாம் நமக்கு இயல்பாய் வருகிறது. பாரதி எழுதுவது போல், "கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரசம் அதிகந்தான்".

இன்னுமோர் உதாரணம்:

நிதர்சனமாயிற்று
நிரந்தரமெதுவும்
இல்லையென
பின்பதுவே
நிரந்தரமாயிற்று

இவையெல்லாம் ஜென் பார்வைகொண்ட ஜப்பானிய ஹைகூவின் பாதிப்பில் உதித்தவை. ஹைகூ ஒரு உந்துதல்தானே தவிர தத்துவம் இந்தியாவினுடையதுதான். ஜென் என்ற பதத்தின் மூலச்சொல் தியானம். இம்மார்க்கத்தை அங்கு ஸ்தாபித்தவர் காஞ்சிபுரத்தைச் சார்ந்த போதிதருமர் என்கிறார்கள். இவரை ஜப்பானில் "தாருமா" என்கிறார்கள். நம்ம ஊர் நாயன்மார்களுக்கு இருப்பது போல் இவருக்கும் எல்லாக் கோவில்களிலும் சின்னதாக சிலை உண்டு. எனவே இக்கவிகளின் தத்துவப்பார்வை ஒரிஜினல்தான் எனலாம்.

இந்திய ஹைகூவிற்கு இந்து மத முகமும் இருக்கிறது. நா.வி எழுதுகிறார்:

கிருஷ்ணன் வருவதற்காய் போட்ட
வரிசைப் பாதங்கள்
வராவிட்டாலும் தொடர்ந்து.

இதை இந்தியன்தான் புரிந்து கொள்ளமுடியும். அதுவும் இவ்வழக்கமுடைய சில சமூகங்கள்தான். மாலன் எப்படி எழுதுகிறார்?

மாமிக்குக் கொலம்
எறும்புக்குச் சோறு
காருக்கோ அது பாதை


இவையெல்லாம் சத்தியமாய் இந்தியக் கவிதைகள்தான்.

ஹைகூவின் இந்திய பரிணாமத்தில் கிடைத்திருக்கும் வேறொரு பரிமாணம் சமூகச்சாடல். இது ஒரிஜினல் ஹைகூ ஸ்டைலில் இல்லாதது. நம்மவர்க்கும் வேறு வழியில்லை. பீடை ஒழிந்தால் தேவலை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் ஒழியமாட்டேன் என்கிறது. கவிதை வாழ்வின் வௌஒப்பாடாய் அமையும் போது சமூகச்சாடல் இயல்பாய் ஹைகூவிலும் பாய்கிறது.

சீமான் வீட்டுச் சாப்பாட்டு மேஜை
வெள்ளை சோற்றில்
துளி வயல் சேறு


இது நா.வி. சமூக நையாண்டி இது. மித்ராவின் குமுறலைப் பார்ப்போம்:

தலைமுறை கோபம்
அடிவிழ, அடிவிழ
அதிரும் பறை


சாதியை இன்னும் தலைமாட்டில் சூட்டிக்கொண்டு அலையும் இந்தியாவின் குரலாக வேறொரு கவிதை:

தீண்டத்தகாதவன் ஊற்றிய தண்ணீர்
தீட்டுப் பார்க்காமல் குடிக்கிறான்
இளநீர்!, இளநீர்!


அப்படியே போய் ஹைகூவிலிருந்து வெகுதூரம் வந்துவிட்ட கவிதைகளும் ஏராளமாய் கிடைக்கின்றன. நல்ல கவிகளுக்கும் கூட எப்போதும் ஹைகூ தரிசனம் கிடைப்பதில்லை என்பது இதிலிருந்து ருசுவாகிறது. ரியாஜ் அகமதுவின் மேற்கோள் காட்டிய கவிதைகூட ஹைகூ எல்லைதாண்டி புதுக்கவிதை பரப்பில் நிற்பது தெரியும். சுஜாதா ஹைகூ எது, பொய்கூ எது என ஒரு பட்டியலே தருகிறார். ஹைகூ ஒரு அனுபவம். நேரடியான அனுபவம். அதில் உருவகங்கள் கிடையாது என்று அவரும் திரும்பத் திரும்ப எழுதுகிறார். இன்னொன்று கூட சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஹைகூ அனுபவம் என்றால் அதில் கட்டாயம் பட்டாம் பூச்சி இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்று. உண்மையைப் பார்க்கப் போனால் தமிழகத்தில் தௌஒக்கப்படும் பூச்சி மருந்தின் அளவை பார்த்தால் இவையெல்லாம் பொய்கூ என்று தான் தோன்றுகிறது! அன்புவாணன் இப்படி எழுதுகிறார் (புதிய பார்வை, 16-31 ஜீலை 94):

இடிக்கப்படவேண்டியது
மசூதியோ கோவிலோ அல்ல
மதம்


இது கவிதையா? ஹைகூவா? வெறும் கூற்றா? என நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் இத்தகைய கூற்றுக்கள் அச்சில் ஏற வேண்டிய தாழ்வான சமூக நிலையில் இருப்பது இந்தியாவின் துரதிர்ஷ்டம். யாரையும் குறை சொல்லத்தோன்றவில்லை.

இருப்பினும் இவ்விடத்தில் பாரதியின் ஒரு சொல்லை நினைவு கூர்வது அவசியம். பாரதி எழுதுகிறான்:

கூடை, கூடையாக பாட்டெழுதி அச்சிடவேண்டும் என்று ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவன் ஆகமாட்டான். கவிதை எழுதுபவன் கவி அன்று . கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் - அவனே கவி!

இப்படிப்பட்ட கவிகள் குறைவுதான் என்பது வெள்ளிடை மலை. ஹைகூ கவிகளும் எப்போதும் இந்த நிலையில் இருப்பதும் இல்லை என்பது வௌஒவந்திருக்கும் தொகுப்புக்களைப் பார்த்தால் புரிகிறது. எனவே ஹைகூவா? பொய்கூவா? என்ற பிரச்சனைக்கு வரும் போது கருத்து வேறுபாடுகள் தெரிகின்றன. ஹைகூவின் யாப்பிலக்கணத்தை வைத்துப் பார்த்தால் தமிழில் வௌஒவந்திருக்கும் எதுவுமே ஹைகூ இல்லை. அப்படித்தான் ஒரு ஜப்பானியன் சொல்லுவான். ஆனால் ஹைகூ பாணி கவிதைகள் நிரம்பக் கிடைக்கின்றன. அட்சர சுத்தமாக கவிதை எழுதுவது கடினம் என்றுதான் தோன்றுகிறது. இது நடந்தது மட்சுயாமா என்ற ஊரில். ஆண்டு 1986. ஹைகூவில் உந்தப்பட்டு ஒரு கவிதை எழுதினேன்:

கோவில் கூரையில்
நிற்கும் மழைத்துளி
சிந்தும் டிவி ரத்தம்

நான் கோவில் என்பது ஜப்பானிய ஷின்டோ ஷிரைன். அமைதியான, அழகான வழிபாட்டுத் தலம். கும்பிடும் கூட்டம் கூட கிடையாது. எல்லோரும் டிவிக்கு முன்னால் தவம் கிடக்கின்றனர். பார்த்தேன், எழுதினேன். எனது ஜப்பானிய மொழி ஆசிரியையிடம் காண்பித்தேன்.

என்ன இது? என்றார். ஹைகூ என்றேன். பதினேழு அட்சரங்கள் எங்கே? என்றார். முழித்தேன். அட்சரம் முக்கியமில்லை, ஹைகூ தரும் சித்திரம்தான் முக்கியம் என்றேன். சித்திரத்தை பார்த்தார். என்ன இது ரத்தம், கித்தமென என்றார். ரொம்ப அச்சாணியப்பட்டார். மேலும் விளக்கினேன். சமூகம் ரொம்ப மாறிவிட்டது. இயற்கையின் எளிமையை ரசிக்க ஆளில்லை. எல்லோரும் டிவி தரும் சுகத்தில் ஆழ்திருக்கிறார்கள். டிவி தருவது செக்ஸ்சும், வன்முறையும்தான் என்றேன்.

ஒரு வழியாக ஒப்புக்கொண்டார். இது தற்கால சமூகத்தை சித்தரிப்பதாக. தமிழிலிருந்து ஜப்பானியதுக்கு மாறிய கவிதைகளில் இது ஒன்று. அந்த மொழியில் கவனமாக 17 அட்சரத்தை போட்டுவிட்டார். இது மழைக்காலக் கவிதை. மழைக்காலமெல்லாம் போய் இலையுதிர் காலம் வந்தது. இயற்கையே தன்னை மோனத்தவத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. காமக்கூரா என்றொரு ஊர். உலகின் மிகப்பெரிய உலோக புத்தன் நின்று கொண்டிருக்கிறான். ஒரு காலத்தில பொன்னார் மேனியனாக. இலைகள் எல்லாம் உதிர்ந்து ஏராளமாய் கிடக்கின்றன. அட்சர சுத்தமாக ஹைகூ வந்தது.

உதிர் இலை (5)
ஏகமாய் நடுவே (7)
புத்தசிலை (5)

இதை மொழி பெயர்த்தபோது இருவருக்கும் சந்தோஷம். ஒரிஜினலிலேயே 17 அட்சரம் விழுகிறது. நான் ஹைகூ எழுதிய காலக்கட்டத்தில் தமிழகத்திலும் நிறைய ஹைகூக்கள் வந்திருப்பதை அறியமுடிகிறது. ஆனால் ஏன் ஒருவர்கூட ஹைகூ இலக்கணத்தை கண்டுகொள்ளவில்லை எனத் தெரியவில்லை. ஒருக்கால் பாரதி சொல்லுவது போல் "ஆனாலும் ஒரேயடியாய் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று" என்ற கவலையாகக்கூட இருக்கலாம்.

ஹைகூவின் தற்போதைய தமிழ் நிலைப்பாடு என்ன என்று பார்த்தால் அது புதுக்கவிதையின் ஒரு திரிபாகவே தோன்றுகிறது. தமிழில் மரபுக் கவிதை எழுதும் பழக்கம் போயே போய் விட்டது. எல்லாமே லெகுவாய் வேண்டியிருக்கிறது இப்போது. இதற்கு எற்ற பாணி புதுக்கவிதைதான். இப்படி இருக்கும் போது ஹைகூவின் மரபுத் தன்மை தமிழகத்தில் செல்லுபடியாகவில்லை. மாற்றாக ஹைகூவின் பாணியும், புதுக்கவிதையின் சுதந்திரமும் இணைந்து குறளின் நவீனத் தோற்றம் போல் அமைந்து விட்டது தமிழ் ஹைகூ. இவை உண்மையில் ஹைகூவும் இல்லை, பொய்கூவும் இல்லை. புதுக்கூ. அப்படித்தான் இதை அழைக்கவேண்டும். பன்னெடுங்காலமாக இந்தியா உலகிற்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறது. கிழக்காசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்ததால் எவ்வளவோ இந்தியாவிற்குள் வந்திருக்கின்றன. இந்தியா எல்லாவற்றையும் உள் வாங்கி புது உரு கொடுத்திருக்கிறது. எத்தனையோ உதாரணங்கள் கூறலாம். பாரசீகர்கள் வந்தனர். அரேபிய மொழி கொஞ்ச நாள் கோலோச்சியது. காலப்போக்கில் உருது என்ற இந்திய மொழி உருவானது. மத்திய கிழக்கின் இசை வந்தது. ஹிந்துஸ்தானி என்ற புதிய இசை வடிவம் பெற்றது. கிருத்துவம் வந்தது. இந்தியத்தன்மை பெற்றது. கிருத்துவ நாடார், கிருத்துவ பிள்ளை என்ற புதிய பெயர்கள் கிருத்துவ மொழியில் எழுதப்பட்டன!

இப்போது ஹைகூ வந்திருக்கிறது. அது புதுக்கூவாக பரிமளித்திருக்கிறது.

இதுதான் இந்தியா, இதுதான் ஹைகூவின் இந்தியப் பரிணாமம். இக்கட்டுரைக்கு உதவிய நூல்கள்/கட்டுரைகள்:

1. One hundred famous Haiku - D.C. Buchanan. Japan Publications Inc. Tokyo. 1973.
2. மகாகவி பாரதியார் கட்டுரைகள் - சி.சுப்பிரமணிய பாரதி. வானதி பதிப்பகம், சென்னை. 1986. பக்கம் 199-201
3. ஜப்பானிய ஹைகூ. தி. லீலாவதி. அன்னம் (பி) லிட். சிவகங்கை 1994.
4. ஹைகூ கவிதைகள். மித்ரா. சாரல் வௌளியீடு. சென்னை. 1990.
5. குடையில் கேட்ட பேச்சு. மித்ரா. தமிழோசை அச்சகம், சென்னை. 1990.
6. கோவில் மணியில் தூங்கும் வண்ணத்துப்பூச்சி. மாலன். கணையாழி. மார்ச் 1991.
7. கடைசிப்பக்கம். சுஜாதா. கணையாழி ஜனவரி 1993, செப்டம்பர் 1993.
8. நா. விச்வநாதன் - கடிதத் தொடர்பில் விழுந்த கவிதைகள்.


Recommended Blogs

K's world
K's Photos
Hymns for the drowning
The inner space (poetry)
Who is K?
Tamil Heritage Foundation

K's Home

********************